உன் நினைவுகளின்
நடன அறையில்
கொஞ்சம் குதூகலங்கள்சில கோபதாபங்களும்
எண்ணற்ற ப்ரியங்களாலும்கண்ணீர்கோடுகளாலும்
நிறைந்து போயுள்ளது

குதூகலங்களால்துள்ளிகுதிக்கும் போது
வசந்த கால இளவரசியாய்
இறுமாந்து
இருந்ததுண்டு

உன் கோபதாபங்கள் கண்டு
கலங்கினாலும்
என்மீதான உன் அக்கறைகளின்
அளவுகளினை
அளவுகோல் கொண்டு
அளக்க முயன்றதுண்டு

நான்
உன்னில் படிக்கும் மௌன பாஷையில்
கிறங்கி போனாலும்
உன்னில்
என்னைமுழுசாய் கண்டு
அகல கண்விரிப்பதுண்டு

இப்போது
நமக்காய் கட்டிய
ஒய்யார வீட்டின் அத்திவாரம்
வலுவிழந்து
ஆட்டம் காண தொடங்கியுள்ளது

சரிபிழை புரியாது
வழிசெய்யும்மார்க்கம் தெரியாமல்
அந்தரத்தில் ஊசலாடுகிறது
சில ப்ரியங்கள் மட்டும்......................


ஏக்கங்களை மட்டும் 
விழிகளில் நிரப்பி கடந்ததை நினைத்து 
மனசு

பக்கத்திலிருந்தும் 
கண்ணாடி விரிசல் அப்பா
உங்களுக்கும் எனக்கும்
எப்போது தூரமானீர்கள் என்னிடமிருந்து

உங்கள் 
கைகளை விட்டு தனியே
நடக்கத்தொடங்கினேனா அப்போதா

நீங்கள் 
இல்லாமல் தனியே சைக்கிள் 
ஓடத்தொடங்கினேனே அப்போதா

உங்களுக்கு 
பிடித்ததை படிக்காமல் 
எனக்கு பிடித்ததை படிக்க தொடங்கினேனே அப்போதா

எனக்கான 
முடிவுகளை நானே 
எடுக்க தொடங்கினேனே அப்போதா


கை பிடித்து நடந்த போது
நிலா காட்டி சிரித்த போது
நான் அழுதபோது சேர்ந்து அழுத போது
கை பிடித்து எழுத பழக்கிய போது
உங்கள் தோள்களில் இருந்த போது
முடிவுகளினை தட்டிக்கொடுத்த போது 
நான் பார்த்த அப்பாவை காணவே இல்லை இப்போது

கருத்துகளும் 
முடிவுகளும்
ரசனைகளும் ஒன்று தானே 
அப்படியிருந்தும்
எப்படி வந்தது இடைவெளி ?

கண்முன்னே


தூரத்தில் ஆட்காட்டிகளில் குரல்களில் 
விழித்துக்கொள்கிறது மனது
இடிந்த கட்டடங்களும் தலையில்லா மரங்களும்
நடந்ததுக்கு சாட்சியாய் 
ஆங்காங்கே

பாதிச்சாமத்தில் தொலைவில் 
ஊளையிடும் நாய்களின் குரல்களில்
மனதுக்குள்ளும் சப்பாத்துக்கால்களின் சத்தமும்
விளங்காத பாஷைககளும் மெதுவாய் 

எல்லாம் இயல்பாய் போவது போல தெரிந்தாலும்
எங்கோ ஒரு மூலையில்
நடந்தவைகள் எல்லாம் ரணமாய்
பச்சைப்புண்ணாய் தெரிகிறது

எழுதுவதற்கு எவ்வளவோ இருந்தும்
எழுத நினைத்தாலும்
என் கண்முன்னே
இவை மட்டும்தான் 
எப்போதும் நீள்கிறது.....

எஸ்,மதி

கறைபடிந்தபடியே வீசுகிறது காற்று
நேற்றைய மேகங்களை சுமந்தபடி
இழப்புகள் மீது மாக்கோலம் போட்டு
மாவிலைகள் தொங்கவிடப்பட்டுள்ளது
இரத்தம் கலந்த நிலத்தை மறைத்து காப்பெற் வீதிகள் நீள்கிறது

எதை நினைத்து அழுவது
இழந்ததற்காகவா?
மறுக்கப்பட்டதற்க்காகவா?
காரனங்கள் தெளிவாக் சொல்ல வார்த்தைகளில்லை என்னிடம்
சூனியத்தை வெறிக்கிறது விழிகள்
எதைஎதையோ ஞாபகப்படுத்துகிறது
இடியும் மின்னலும்

எதிரியான
என் நன்பனின் தோளில் கைபோடும் போதும்
மனது கடினப்படுகிறது
நரம்புகள் இறுகிறது
கறுப்பு வெள்ளை படமாய் ஏதோ கண்முன்னே தோன்றி மறைகிறது
நிஜங்கள் என்னை சுடுகிறது
மறக்கபட்டவைகள் பற்றியே
மனது அசைபோடுகிறது

கால்கள் மேற்கு நோக்கியே
நடக்க தலைப்படுகிறது
இழப்புகளை நினைத்து புலம்புகிறது இதயம்
கடினப்படுகிறது கண்கள் மீண்டும்..................


இந்த நிலம் இரத்தத்தின் பிசுபிசுப்பை
கேட்டு அழுகிறது
மிச்சமில்லாமல் எல்லாம் போனபிறகும்
சாம்பல்மேடு சடலங்களை கேட்கிறது திரும்பவும்

சமீபத்தில
சப்தமில்லாம் கிடந்த பீரங்கிகள் பசியெடுத்து
சாப்பாடுபோடு என் விழிபார்க்கிறது
இங்கே எதுவுமேயில்லை
அழுகுரல்களையும் பிணநாற்றத்தையும் தவிர
ஆனாலும்
இந்த நிலம் இரத்தம் கேட்டு அழுகிறது

பார்க்கும் திசையெல்லாம்
முள்ளுச்செடிக்குக் கீழே எலுப்புகள் மின்னுகிறது
தோண்டும் பக்கமெல்லாம் கல்லுகளிற்கிடையே
மண்டையோடுகளும் சிக்குகிறது

என் கடைசித்தளிரின்
இரத்தத்தை யாசகம் கேட்டு
இந்தமண் இன்னும் அழுதுகொண்டுதானிருக்கிறது

மீன்முள்ளாய் தைக்கிறது
உன் பிரிவின் வலி
இனி
வெக்கப்படவோ வேதனைப்படவோ
ஒண்டுமில்லை

நீ
என்னிடம் காதலை யாசகம் கேட்ட காலம்போய்
உன்னிடம் காதலை யாசகம் கேட்டு
தினம் தினம் உன்னிடம்
பலத்த மௌனங்களால்
என்னை அழவைக்கிறாய்
ஒரு வார்த்தை
ஒரே ஒரு வார்த்தை மட்டும் பேசு

கவிதைக்குள்
உன்னை காணும் போதெல்லாம்
கண்கள் சிவக்குது
உதடுகள் நடுங்குது
மனசுக்குள் ஒரு இனக்கலவரமே வெடிக்குது

என் பதிலுக்கு
நீ காத்திருந்த காலம் போய்
உன் பதிலை பார்த்து என் காத்திருப்புகள் தொடருது
நிறைமாத வயல் அறுவடையை எதிர்ப்பார்ப்பதுபோல்
என் விழி நிறையகுளத்தோடு
உன் ஒற்றைப்பார்வைக்கு என் காலம் ஏங்குது

உன் இடக்கை மச்சத்தை
எதிர்பாராமல் பாக்கும்போது
மனசு கிடந்து தவிக்குது
சொந்தம் கொண்டாட
உனக்கு பிடிச்ச கருவாட்டுகுழம்பும்
எனக்கு பிடிச்ச புளிச்சாதமும் தனியதான் கிடக்கு

என் வயசுக்கு வந்த கவிதையெல்லாம்
கந்துவட்டிக்காரியாட்டம்
உன் காதலை வசூலிக்க
காத்துக்கிடக்கு வாசலோரம்..................